Sunday, August 2, 2009

சந்தனமாய் சருகுகள்....

கனவுகளில்
வியர்க்கும்போது கூட
கவரி வீசிய காதலியே,

நீ
என்னை விட்டுப்போன
நாள் முதல்
என் நாட்குறிப்பேடு
வார்த்தைச்சோலை இல்லாமல்
பாலைவனமாய்....
வறண்டுபோய்..

அந்த நாள்முதல்
என் கனவுகள் அனைத்தும்
கனவுகளாகவே..

பெண்ணே!
உன்னைப் பூஜித்த பூக்கள் கூட
சருகாகாமல் மொட்டுக்களாய்......

நந்தவனமாய்
உன் பாதப்பூக்கள் மலர்ந்தபிறகு
உதித்தெழுந்த சூரியன்
அதன்பிறகு எப்போதும்
மேகங்களை வெறுத்து வெறுத்து
பூமி எங்கும் வெறுமையாய்....

உன் நகங்களின் வண்ணத்தில்
நயனங்களின் நர்த்தனத்தில்
பனியாய் கரைந்த
என் பொழுதுகள்

இத்தனைக்கும் ....
இத்தனைக்கும்
என்னவளே
நீதானே காரணம்.

உன் காது வளையங்கள் போல
என் சிந்தனைகள்
உன்னில் தொடங்கி
உன்னில் முடியும்
என் சிந்தனைகள் கூட
ஒரு வகையில் வளையங்களாய்

உன் சுவாசங்கள்
எனக்கு சொல்லிக்கொடுத்த
வாழ்க்கைத் தத்துவங்கள்
அத்தனையும்,
காலங்கள் பல கடந்தும்
ராஜ ராகம் பாடும்
வேனில் காலத்து குயில்களாய்
என்னில் பாடும் பூபாளம்....,

என் உணர்வுகள்கூட
இன்னும் இன்னும்
உன் நினைவுகளால்......
ஊமையாய்

மாறும் கோடைகாலம்
மாறும் குளிர்காலம்
மாறும் பனிக்காலம்
மாறும் இலையுதிர்காலம்
இத்தனைக்கும் மத்தியில்
உன் நினைவுகள்
மாறாத வேனில் காலமாய்
நிரந்தரமாய் துளிர்த்துக்கொண்டே...

அன்பே.........வா
நீ வாழும் வரைக்கும்
நாம் சந்தித்த மரத்தடியில்
சேரும் சருகளைப் பத்திரப்படுத்தி
அன்பே ....... எடுத்துவா

அவைதான் ....
சாகாமல் சாகும்
என் சரீரத்தை சாம்பலாக்கும்
சந்தனக்கட்டைகள்

ஆம்.. எனக்கு அந்த
சருகுகள்தான் சந்தனக்கட்டைகள்..


26 பிப் 1989

No comments:

Post a Comment