Tuesday, August 4, 2009

இன்றைய இரவில்... கனவில்

வாழ்க்கை
ஒரு வித்தியாசமான போர்க்களம்
இதில் கத்திக்கும் இரத்தம் வரும்
பிரிவு வரும்போது.....

தோழியரே..!
நாம் மின்மினிகளாய்
இந்தக் கல்லூரிப்பெண்ணின் கையில்
துள்ளித்திரிந்த நாட்கள்
இன்னும் என் நெஞ்சில்
அச்சு மாறாத சோகராகங்களாய்....

பரந்த ஆலமரமாய் இந்தக் கல்லூரி
விழுதுகள் ஆசிரியர்கள்
நாம் அதன் கனிகள்
உதிர்கிறோம்...ம்ஹ்ம்
கனிகள்தானே!

தோழி!
பொழுது போக வேளைகளில்
பொய்க்கோபம்தானே
நம் விளையாட்டு..

பேசிய வார்த்தை
சிந்திய தண்ணீர்
விடுபட்ட அம்பு
துடிப்போடு வெளிப்பட்ட
துப்பாக்கி குண்டு
இவைகளைப்போல்
உறவுகளே..
நம் பழைய நிணைவுகள்
திரும்ப அரும்பாத வாசமலர்கள்

நேற்றே நமக்குத் தெரியும்
மலர்களே
நம் உறவுகள்
நிரந்தரமில்லா நிரந்தரங்கள்

நட்புப்பூவைச் சுற்றிச் சுற்றி
வண்டுகளய்
நாம் ரீங்கரித்த ராஜ ராகம்
இளவேனில் காற்றில்
இந்த ப்ரபஞ்சம் முழுதும்
வீசி வீசி முடிவில்
ஏன்
புயலாக ....நம்மிடமே
திரும்பியிருக்கிறது..

நட்பு நட்சத்திரங்களே,
நமக்கு வரும் விடியல்
நம்மை மறைத்தா
உதிக்கவேண்டும்..

பறித்த பின்னும்
வாசம்வரும்...மலர்
தாயின் ஏக்கத்தில்
வாடி உதிர்வது போல
நமக்குள் நாம் சருகுகளாய்
மருகி மருகி உதிர்கிறோம்..

மானுட அம்புகளே
ஏவும் வில்லைத் தெரிகிறது
இலக்கு எங்கே....?

கல்லூரி அம்பறாத்தூளி
காலமென்னும் வில்லோடு
இன்று சண்டை..
ச்சே...
பிரித்து எறிவதோ அம்புகளாய்
நம்மை................

நாம்
காலக் கர்ணனின் கைபட்டு
அறுந்த மேகலை.......ஆனால்
கோர்த்தெடுக்க தோழி
எந்தத் துரியோதனனும் இல்லை!

அழிவும் ஒன்றின் ஆரம்பம்
பிரிவு கூட அப்படித்தான்
என்ற நம்பிக்கையில்
இன்று நாம் சுமக்கிற
இந்த வாச நினைவுகள்
நாளைய சருகுகளைக்கூட
மலர்களாக்கும் சாகச பெட்டகங்கள்.

சுமப்பதற்கு சங்கடப்படாத
இந்த சுக நினைவுகளை
சுமந்து பிரிகிறோம்

தோழியரே
சந்திப்போம்.. பேசுவோம்
காற்றுவெளிகளில்
காலார நடப்போம்
கரங்கள் தட்டி கவிகள் பாடுவோம்
இமைப்போழுதும் பிரிந்திருக்காமல்
இருவிழிகளில் சோர்வில்லாமல்
அனிச்சமலர்களாய்
சோக சுவாசம் படாமல்
மீண்டும் மீண்டும்
சந்திப்போம்... பேசுவோம்
ஓடுவோம்... பாடுவோம்
தோழியரே
நாளைய பகலில் அல்ல..
அது நடக்காது..
இன்றைய இரவில்...............
.....................................கனவில்

10/3/1989

No comments:

Post a Comment