Tuesday, August 11, 2009

ராசவிழிகளின் பரிசீலனைக்கு...

ராசவசந்தத்திற்கு,

ஒரு ரகசிய வேண்டுகோள்.

பனியில் மலர்ந்த பாரிசாதமே.

உன்னிடம் எனக்குப் பேசவேண்டும் .

பூமியின் பார்வையில்

அண்டவெளிகளின் நட்சத்திரங்கள் போல

சற்று தள்ளிநின்றே...

உன்னிடம் எனக்கு நிறைய பேசவேண்டும்.

எனக்கு நீ பரிச்சயமானது

என்தங்கையின் அறிமுகத்திலல்ல...

தாவணி போர்த்திய தங்கநிலவே.

அதற்கு முன்பே

ஒரு வெங்கலச் சிரிப்பில்...

ஓ..நீ நடந்த பாதையை

என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த

அந்த

வாய் மணியோசை தான்

அன்றாடம் என்னை துயிலெழுப்பிக் கொண்டிருக்கிறது.

உனக்குத் தெரியுமோ?..தெரியாதோ

விளக்குகள் தான் இந்த நிழலைத் தேடி

வந்திருக்கின்றன...

நிழல் விளக்கைத் தேடுவது இதுவே முதல்முறை

காதல்

இந்த வார்த்தைக்கு அமானுசிய சக்தி இருப்பதாய்

எனக்கு நம்பிக்கை இல்லை

தோழி. நானறிவேன்

காதலே வாழ்க்கை அல்ல

குழந்தையில் விளையாட்டுக்கு துணை சேர்ப்பது போல்

இளமையில் வாழ்க்கைக்கு துணை சேர்க்கும்

ஒரு வசீகர விசாரிப்புதான்... காதல்

ஏற்கவோ, மறுக்கவோ

உரிமைகள் உனக்குத்தான்

காலகாலமாக கற்பனை செய்வதாலேயே

கடுகத்தனை இருந்த காதல்

உப்பி உப்பி பூதாகரமாய்...

ஒரு மாயை

காதலும், திருமணமும் கூட

என்னைப் பொருத்தவரை

நீண்டகால நட்பிற்கான ஒப்பந்தமே தவிர

பூச் சுற்றப்பட்ட பொன்விலங்கு அல்ல

கால காலமாய் கற்பிக்கப்பட்ட

புனிதக் காதல் நடைமுறையில்

இன்று வரை [ஒரு சில மட்டும் விதிவிலக்காய்]

நீ என்னை நேசிக்கிறாயா?

என்பது சாதாரண வார்த்தைகள் தான்

யோசித்துப்பார் ..நான்

இதற்கு ஏன் தயங்கித்தயங்கி

தலையைக்குனிந்து மனசை நிமிர்தவேண்டும்

மீண்டும் நினைவுறுத்துகிறேன்

நீ எனக்கு பரீச்சயமானது

என் தங்கையின் அறிமுகத்திலல்ல..

தாவணி போர்த்திய தங்க நிலாவே

அதற்கு முந்திய

ஒரு வெங்கலச் சிரிப்பில்...

ஒரு வகை உணவு

பிடிக்குமா? பிடிக்காதா?

என்பது போன்றது தானே

காதலிக்கிறாயா? இல்லையா? என்பதும்

ஒரு சாதாரண விருப்பு

அல்லது

நிராகரிப்பு
இதற்கேன் பொழுதுகள்

கற்பனையிலும் தயக்கத்திலும் கரைய வேண்டும்

பெண்ணே

இப்போது சொல் ..

நானுன்னை நேசிக்கலமா..? காதலியாய்;

ஒரு வசந்த விசாரிப்புதான்...

எற்பும் மறுபும் சாதாரணம் தான்

அதிலும் `எனக்கு சாதா ரணத்தைக்கூட

ஏற்படுத்தாத எதிர்பார்ப்பு.

நீ என்னை எப்படி நேசிக்கிறாய்

என் அன் பு ள்ளவே...

நீ சொல்வதால் என் சுவாசம் ஒன்றும் இளைப்பறிவிடாது

ஆனால் தோழி ஓர் அன்பு வேண்டுகோள்

உன் பதில் ஏற்போ? மறுப்போ?

மறுப்பாய் இருப்பினும் .....ஏற்பாய் இருப்பினும்

ஏற்பும் மறுப்பும் என்க்கு சாதாரணம்தான்

மீண்டும் மீண்டும் சந்திப்பொம்..... பேசுவோம்

காற்றுவெளிகளில் காலார நடப்போம்

கரங்கள் தட்டி கவிகள் பாடுவோம்

தோழி.....

நம் சுவாசங்கள் கூட சுகாதாரமானது

ஆதலினால்

மீண்டும் மீண்டும்

சந்திப்போம்.... பேசுவோம்...

காற்றுவெளிகளில் காலார நடப்போம்

கரங்கள்தட்டி கவிகள் பாடுவோம்

காதலர்களாய்..........

அல்லது நண்பர்களாய்..............

ஆம்

அல்லது நன்பர்களாய்......

ஏனெனில்

நம் சுவாசங்கள்கூட சுகாதாரமானது...



12/3/1989

No comments:

Post a Comment